கிடப்பில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படுமா?
கிடப்பில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 சட்டசபை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படுமா?
ADDED : ஜன 01, 2025 10:23 PM
கடந்த, பிப்., மாத பட்ஜெட்டில், வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 நடைமுறைக்கு வராதது, வேளாண் துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் வேளாண் அமைச்சகம் சார்பில், 2023ல் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டது.
வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை உட்பட வேளாண் துறை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒரே துறையின் கீழ் இணைக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக, தோட்டக்கலை மற்றும் வேளாண் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும் விவசாய பரப்பு, அத்துறை சார்ந்து பணியில் உள்ள அலுவலர்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.
இத்திட்டத்தில், மூன்று முதல் நான்கு கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவர்.
அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் பயிர் சாகுபடி, விவசாயிகளுக்கான ஆலோசனை, தொழில்நுட்ப பயிற்சி என, அந்த பயிர் வளர்ச்சிக்குரிய முழுப் பொறுப்பையும் அந்த அலுவலர் தான் ஏற்க வேண்டும் என்பது போன்ற பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
ஆனால், இத்திட்டம் இதுவரை அமலுக்கு வராத தால் வேளாண், தோட்டக்கலை அலுவலர்களே அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து, வேளாண் துறையினர் கூறியதாவது:
கடந்த, 2024 ஜன., மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட, விவசாயிகளுக்கு மொபைல் போன் வாயிலாக இயங்கும் தானியங்கி மோட்டார் வழங்குவது, ஒரு கிராமம் ஒரு பயிர் உள்ளிட்ட அறிவிப்புகள் அமலுக்கு வந்துவிட்டன.
ஆனால், கடந்த, 2023 மார்ச் மாத பட்ஜெட்டில், 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு, இதுவரை அமலுக்கு வரவில்லை.
இது, மிகவும் சிறப்பான திட்டம். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிகளவிலான உயரதிகாரிகள் பணியிடங்கள் ரத்தாகும் சூழ்நிலை உள்ளது. பணியிடங்களை பாதுகாக்கும் நோக்கில், உயரதிகாரிகள் தான் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
வரும், 6ம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

