மூத்த குடிமக்களுக்கு கட்டணச்சலுகை மீண்டும் அமல்படுத்துமா ரயில்வே: பயணிகள் எதிர்பார்ப்பு
மூத்த குடிமக்களுக்கு கட்டணச்சலுகை மீண்டும் அமல்படுத்துமா ரயில்வே: பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2025 05:38 AM
மதுரை: 'ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா' எனபயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் மேல் மூத்த குடிமக்கள் உள்ளனர். ரயில்வே விதிமுறைப்படி 60 வயது கடந்த ஆண்கள், 58 வயது கடந்த பெண்கள் மூத்த குடிமக்களாக கருதப்படுவர். இவர்கள் ரயிலில் பயணிக்க, பெண் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் அடிப்படைக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்தது.
கொரோனாவின் போது நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து பல மாதங்களாக நிறுத்தப்பட்டன. பாசஞ்சர் ரயில்கள் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ரயில்வே வருமானத்தை கூட்டும் வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையும் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தபின் முன்பு இருந்ததை போன்று ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
ரயில்வே துறையின் வருமானம் பன்மடங்கு உயர்ந்தது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகை மீண்டும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் அவர்கள் தற்போது வரை முழு கட்டணம் செலுத்தி பயணிக்கும் நிலை உள்ளது. இம்முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச் செயலாளர் பத்மநாதன் கூறுகையில், ''2009 முதல் வழங்கப்பட்டு வந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை கொரோனாவுக்கு பின் நிறுத்தப்பட்டது. ஆன்மிக சுற்றுலா செல்லவும், மருத்துவ சிகிச்சை பெற வெளியூர்களுக்கு சென்று வரவும் இக்கட்டணச் சலுகை முதியவர்களுக்கு பேருதவியாக இருந்தது. எனவே மூத்த குடிமக்களின் நலன் கருதி வரும் பட்ஜெட்டில் இச்சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்றார்.