'கஸ்டம் ஏர்போர்ட்' ஆக அறிவிக்கப்படுமா புதுப்பிக்கப்பட்ட துாத்துக்குடி விமான நிலையம்? 26ல் துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
'கஸ்டம் ஏர்போர்ட்' ஆக அறிவிக்கப்படுமா புதுப்பிக்கப்பட்ட துாத்துக்குடி விமான நிலையம்? 26ல் துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
UPDATED : ஜூலை 24, 2025 01:36 PM
ADDED : ஜூலை 24, 2025 12:43 AM

புதுப்பிக்கப்பட்டுள்ள துாத்துக்குடி விமான நிலையத்தை, 'கஸ்டம் ஏர்போர்ட்' எனும் சுங்க வசதி கொண்ட விமான நிலையமாக தரம் உயர்த்தி, மத்திய அரசு அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக, ரயில், பஸ், விமானம், கப்பல் என, நான்கு வகையான போக்குவரத்து வசதியுடைய நகரமாக, துாத்துக்குடி உள்ளது.
உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்களும், இங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
துாத்துக்குடி உள்நாட்டு விமான நிலையமாக இயங்கி வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக பயணியர் போக்குவரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, ஏ.ஏ.ஐ., எனப்படும் விமான நிலைய ஆணையம், 227.33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம், 113.63 கோடி ரூபாயில், 3,115 மீட்டர் ஓடுபா தை என, 381 கோடி ரூபாயில், துாத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முழுமை பெற்றதையடுத்து, வரும் 26ம் தேதி, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
வசதிகள் அதிகரிக்கப்பட்டாலும், துாத்துக்குடி ஏர்போர்ட், உள்நாட்டு விமான நிலையமாகவே இருக்கிறது.
இதை சுங்க வசதி கொண்ட விமான நிலையமாக மேம்படுத்த வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது:
இந்தியாவில் உள்நாடு, சர்வதேசம், அரசு மற்றும் தனியார் பங்களிப்பு, சுங்க வசதி கொண்ட விமான நிலையம் என, விமான நிலைய ஆணையம் வகைப்படுத்தி உள்ளது.
இதில், 'கஸ்டம்' விமான நிலையம் என்பது, சுங்க வசதிகள் கொண்ட விமான நிலையமாகும். அதாவது, இங்கு சர்வதேச விமானங்களை இயக்க முடியும். ஆனால், முழுமையான சர்வதேச விமான நிலையம் என, சொல்ல முடியாது.
ஆனால், பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய முடியும். இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், சரக்கு போக்குவரத்தை துவங்கலாம்.
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச சேவைகளும் கிடைக்கும்.
துாத்துக்குடியில் உள்ள கடல்சார் மற்றும் விவசாய பொருட்களுக்கு, வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளது.
துாத்துக்குடி ஏற்கனவே, 'கிளஸ்டர் 2' வகை விமான நிலையமாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட துாத்துக்குடி விமான நிலையத்தில், தரையிறங்கும் வசதி, இரவு நேர விமானங்களை கையாள்வதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது.
சரக்கு விமானங்களை கையாளுவதற்கு, பெரிதாக எந்த ஒப்பந்தமும் தேவையில்லை. எனவே, மத்திய அரசு புதுப்பிக்கப்பட்ட துாத்துக்குடி விமான நிலையத்தை, 'கஸ்டம்' வசதிகள் கொண்ட விமான நிலையமாக அறிவித்தால், மாநிலத்தின் வளர்ச்சியும் கணிசமாக உயரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பதற்காகவே பழனிசாமி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 'வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்' என, பழனிசாமி கூறி வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியை, பழனிசாமி சந்திக்க இருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
- -நமது நிருபர் -