துருப்பிடித்த ஜன்னல், தேய்ந்த இருக்கை 5 விரைவு ரயில்களுக்கு பிறக்குமா விடிவு?
துருப்பிடித்த ஜன்னல், தேய்ந்த இருக்கை 5 விரைவு ரயில்களுக்கு பிறக்குமா விடிவு?
ADDED : பிப் 08, 2025 09:37 PM
சென்னை:ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து விரைவு ரயில்களில், பழைய பெட்டிகளே பயன்படுத்தப்படுவதால், துருப்பிடித்த ஜன்னல்கள், தேய்ந்து போன இருக்கைகள், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் என, பிரச்னைகள் தொடர்வதாக, பயணியர் புகார் கூறுகின்றனர்.
விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் உட்பட, பல்வேறு வசதிகள் இருக்கும். எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில், 80 படுக்கைகளும், 'ஏசி' பெட்டியில், 72 படுக்கை களும் இருக்கும்.
முக்கிய விரைவு ரயில்களில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, நெல்லை, பொதிகை, பாண்டியன், ராக்போர்ட், முத்துநகர் உள்ளிட்ட விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, புது எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
இருப்பினும், ராமேஸ்வரம், திருச்செந்துார், குருவாயூர், மன்னார்குடி, புதுச்சேரி ஆகிய, ஐந்து விரைவு ரயில்களில் இன்னும் பழைய பெட்டிகள் தான் உள்ளன. இந்த பெட்டிகளில் பயணிருக்கான வசதிகள் இல்லை.
துருப்பிடித்த ஜன்னல்கள், தேய்ந்து போன இருக்கைகள், துர்நாற்றம் வீசும் கழிப்பறைகள் போன்ற பிரச்னைகள் நீடிக்கின்றன. மொபைல் போனுக்கான சார்ஜிங் பாயின்ட்டுகளும் செயல்படுவதில்லை.
அதனால், இந்த ரயில்களிலும் நவீன எல்.எச்.பி., பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்று, தெற்கு ரயில்வேக்கு பயணியர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.