மாநிலம் முழுதும் குறுவை தொகுப்பு திட்டம் சிறுதானியம், பருப்பு உற்பத்தி குறையுமா?
மாநிலம் முழுதும் குறுவை தொகுப்பு திட்டம் சிறுதானியம், பருப்பு உற்பத்தி குறையுமா?
ADDED : ஜூன் 07, 2025 11:01 PM
சென்னை:மாநிலம் முழுதும் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதால், சிறுதானியங்கள், பருப்பு வகைகள் உற்பத்தி குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா பருவ நெல் சாகுபடி பிரதானமானது. ஆண்டுதோறும் சம்பா பருவத்தில், 18 லட்சம் ஏக்கரிலும், குறுவை பருவத்தில் 4 லட்சம் ஏக்கரிலும் சாகுபடி நடக்கிறது.
குறுவை பருவத்தில் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பாண்டு, இந்த திட்டத்திற்கு, 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, நடப்பாண்டு முதல் டெல்டா அல்லாத 29 மாவட்டங்களிலும் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவ சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 102 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இந்த நிதியில், விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இயந்திர நடவு செய்வதற்கு மானியம் போன்றவை வழங்கப்பட உள்ளன. இதற்கான பயனாளிகள் தேர்வில், வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் உள்ள பல விவசாயிகள், நெல்லுக்கு மாற்றாக பருப்பு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் சிறப்பு திட்டத்தால் ஈர்க்கப்பட்டு பலரும், நெல் சாகுபடியில் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. மற்ற பயிர்களை காட்டிலும், நெல்லுக்கு பாசனம் செய்வதற்கு அதிகளவில் நீர் தேவைப்படும்.
இதனால், நீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும், நெல் உற்பத்தி அதிகரித்தால், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தி குறையும். அவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கணிசமாக உயரும்.
இது, பொதுமக்களை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. குறுவை சிறப்பு திட்டத்தில் நெல்லுக்கு பதிலாக, மற்ற பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:
அரிசி உற்பத்தியில் சீனா முதலிடத்தில் இருந்தது. தற்போது, இந்தியா அதை மிஞ்சியுள்ளது. அதன் எதிரொலியாக, தமிழகத்தில் நடப்பாண்டு அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. அரிசி விலை மூட்டைக்கு, 50 ரூபாய் வரை குறைந்துள்ளது.
குறுவை தொகுப்பு திட்டத்தில் நெல்லை போலவே, அந்த மாவட்டங்களில் விளையும் மற்ற பயிர்கள் சாகுபடியையும் அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்கேற்ப சிறப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.