ஸ்டேஷன்களில் 'கட்டப்பஞ்சாயத்து' செய்யும் ஓய்வு போலீஸ் அதிகாரிகள்: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு
ஸ்டேஷன்களில் 'கட்டப்பஞ்சாயத்து' செய்யும் ஓய்வு போலீஸ் அதிகாரிகள்: முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு
UPDATED : ஏப் 23, 2025 04:44 AM
ADDED : ஏப் 23, 2025 04:27 AM

மதுரை: தமிழகத்தில் ஓய்வுபெற்ற எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் சிலர் நிறுவனங்கள், மருத்துவமனை மீதான புகார் தொடர்பாக ஸ்டேஷன்களில் 'கட்டப்பஞ்சாயத்து' செய்வதாக புகார் எழுந்துள்ளது.
போலீஸ் துறையில் ஏ.டி.ஜி.பி., -ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர்களில் சிலர் தனியார் நிறுவனங்களில் ஆலோசகர், பாதுகாப்பு அதிகாரி, திட்ட அதிகாரி என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். ஓய்வு எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் சிலர் கல்விக்குழுமம், மருத்துவமனைகள், கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்கள், கமிஷனர் அல்லது எஸ்.பி., அலுவலகங்களில் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றனர்.
ராகிங், விடுதி பிரச்னை தொடர்பாக பள்ளி, கல்லுாரி நிர்வாகம் குறித்து போலீசில் மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தாலோ, மருத்துவமனையின் சிகிச்சை குறித்து புகார் தெரிவித்தாலோ ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. புகார் குறித்து விசாரணை நடக்கும்போது சமரசம் செய்து வைக்குமாறு டி.எஸ்.பி., அல்லது இன்ஸ்பெக்டரிடம் அவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வலியுறுத்துகின்றனர். பிரச்னை நீடிக்கும் பட்சத்தில் ஸ்டேஷனில் அவர்களே ஆஜராகி புகார்தாரரிடம் 'கட்டப்பஞ்சாயத்து' செய்து வழக்குப்பதிவு செய்யாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
செக்யூரிட்டி நிறுவனங்கள்
சில ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், சொந்தமாக செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகின்றனர். மாதம் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வி.ஐ.பி.,க்கள் வீடு, அலுவலகம், நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆட்களை நியமித்துள்ளனர். ஆனால் செக்யூரிட்டியாக பணியாற்றுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8 ஆயிரம் மட்டுமே தருகின்றனர். மீதித்தொகை 'கமிஷன்' மற்றும் இ.எஸ்.ஐ., பி.எப்.,க்கானது என எடுத்துக்கொண்டு 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை மனித உழைப்பை சுரண்டி வருகின்றனர்.
தொழிலாளர் நலச்சட்டத்தின்படி நிர்வாக காரணங்களுக்காக ஊழியர்கள் சம்பளத்தில் அதிகபட்சம் 10 சதவீதம் பிடித்தம் செய்யலாம். ஆனால் சில ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் 25 சதவீதம் வரை பிடித்தம் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மனித உழைப்பு சுரண்டலுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

