நெல்லை அரிசியாக மாற்றும் அரவை கூலி உயர்த்தப்படுமா?
நெல்லை அரிசியாக மாற்றும் அரவை கூலி உயர்த்தப்படுமா?
ADDED : ஆக 14, 2025 03:09 AM
சென்னை:நெல்லை அரிசியாக மாற்றுவதற்கான கூலியை, குவின்டாலுக்கு, 600 ரூபாயாக உயர்த்தி தருமாறு, அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், வாணிப கழகத்திற்கு சொந்தமான, 21 அரிசி ஆலைகளிலும், 623 தனியார் அரவை ஆலைகளிலும் அரிசியாக மாற்றப்படுகிறது.
உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னையில் நேற்று, அதிகாரிகள் மற்றும் அரவை ஆலை முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கூலியை உயர்த்தி தருமாறு, ஆலை உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம் கூறியதாவது:
நெல்லை அரிசியாக மாற்றி தருவதற்காக, 100 கிலோ எடை உடைய குவின்டால் புழுங்கல் அரிசிக்கு, 40 ரூபாயும், பச்சரிசிக்கு, 25 ரூபாயும் கூலியாக வழங்கப்படுகிறது. தற்போது, மின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வேலையாட்களின் கூலியும் உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் குவின்டால் நெல்லை அரிசியாக மாற்றி தர, 600 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகத்திலும் 600 ரூபாய் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.