நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா? பழனிசாமி புகாருக்கு அமைச்சர் பதிலடி
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா? பழனிசாமி புகாருக்கு அமைச்சர் பதிலடி
ADDED : நவ 25, 2024 01:18 AM
சென்னை: நெசவாளர்கள் வீட்டில் தறிகள் உள்ளனவா என்று கணக்கெடுத்து, அப்பகுதிகளுக்கு வணிக ரீதியாக தொழில் வரி விதிக்கப் போவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளதாகக் கூறி, அதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அளித்துள்ள பதில்:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக, கைத்தறித் துறையினரால், எவ்வித அறிவிப்போ, அரசாணையோ வெளியிடப்படவில்லை.
மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பிட்டு, வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு எது என்று கண்டறிய, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி வாரியாக ஆய்வு செய்ய, நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை சதுர அடிக்கான தொழில் வரி எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
எனவே, குடிசை தொழில் போல, வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு, தொழில் வரி விதிக்கப் போவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான நுால்கள், மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, 54.42 கோடி ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டு உள்ளது.
மாதந்தோறும் நுால் விலை நிர்ணய குழு கூட்டம் நடத்தப்பட்டு, நுால் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நுால் விலை உயர்வால், நெசவாளர்கள் சிரமப்படுவதாகக் கூறுவதும் ஆதாரமற்றது.
இலவச வேட்டி, சேலை மற்றும் சீருடை திட்டங்கள், தமிழக நெசவாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்து, தரமற்ற சேலைகள் குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் வாங்கப்படுகிறது.
மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குகின்றன என்ற குற்றச்சாட்டும், உண்மைக்கு புறம்பானது.
நெசவாளர்கள் நலனை மேம்படுத்த, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவற்றை அறியாத எதிர்க்கட்சி தலைவர், செவிவழி செய்திகளை கேட்டு, உரிய தரவுகள் எதுவுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை, அரசியல் ஆதாயத்திற்காக தெரிவித்துள்ளார். இதை கண்டிப்பதுடன், அவர் இம்மாதிரியான நடவடிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும்.
இவ்வாறு காந்தி தெரிவித்துள்ளார்.