சிறு, குறு நிறுவனங்களுக்கு தனி காப்பீட்டு திட்டம் வருமா? இயற்கை பேரிடரால் பாதிப்பதால் எதிர்பார்ப்பு
சிறு, குறு நிறுவனங்களுக்கு தனி காப்பீட்டு திட்டம் வருமா? இயற்கை பேரிடரால் பாதிப்பதால் எதிர்பார்ப்பு
UPDATED : மார் 07, 2025 04:43 AM
ADDED : மார் 07, 2025 12:22 AM

சென்னை: மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் சேதம் ஏற்படுவதால், எம்.எஸ்.எம்.இ., எனப்படும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இயற்கை பேரிடரின் போது ஏற்படும் இழப்பை சமாளிக்க, தனி காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால், 2 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கி, தொழில் நடத்துகின்றன.
கடந்த ஆண்டு இறுதியில், விழுப்புரம், கடலுாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அம்மாவட்டங்களில் இருந்த ஏராளமான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தண்ணீரில் மூழ்கின. அதற்கு முந்தைய ஆண்டில், சென்னையில் வீசிய, 'மிக்ஜாம்' புயலால், சென்னை மற்றும் அதைச் சுற்றிய மாவட்டங்களில் உள்ள, 'சிட்கோ' தொழிற்பேட்டைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், அங்குள்ள தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. எனவே, பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்க, தனி காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துமாறு, அரசுக்கு சிறு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
தமிழகத்தில், 2015ல் இருந்து ஆண்டுதோறும் கனமழை, வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மழையால் பாதிக்கப்படும் விவசாயிகள், மீனவர்களுக்கு, அரசின் சார்பில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில்லை.
பல நிறுவனங்கள், இயந்திரங்களுக்கு காப்பீடு செய்துள்ளன. வங்கி கடனில் அவை வாங்கப்பட்டதால், பாதிப்பு ஏற்படும் போது காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையை, வங்கிகள் வாங்கிக் கொள்கின்றன.
உதாரணமாக, வங்கியில், 10 ஆண்டுகளுக்கு கடன் வாங்கி, ஒரு இயந்திரம் வாங்கப்படுகிறது. மூன்றாண்டுக்கு கடன் செலுத்தி, நான்காவது ஆண்டில் வெள்ளப்பெருக்கில் இயந்திரம் சேதமடைவதாக வைத்துகொள்வோம். இயந்திரம் காப்பீடு செய்யப்பட்டு இருப்பதால் அதற்கான இழப்பீட்டு தொகையை, வங்கிகள் வாங்கி கொள்கின்றன.
மூன்று ஆண்டு கடன் செலுத்தியும், காப்பீடு செலுத்தியும், உரிமையாளருக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. எனவே, பேரிடர் காலங்களில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால், உரிமையாளருக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில், தனி காப்பீட்டு திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.