தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வருமா?: ரூ.150 கோடியில் அரசு அவசர திட்டம்
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வருமா?: ரூ.150 கோடியில் அரசு அவசர திட்டம்
ADDED : ஏப் 28, 2024 04:39 AM

கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அம்மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 150 கோடி ரூபாய், குடிநீர் வினியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் வாயிலாக குடிநீர் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது செயல்படும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரிக்க வேண்டும்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், குடிநீர் பிரச்னைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண, கமிஷனர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்பட, தடையின்றி மின்சாரம் கிடைப்பதை, மின் வாரிய தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
ஊராட்சி பகுதிகளிலும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இப்பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்படாமல், அனைத்து மாவட்டங்களையும், தலைமை செயலர் கண்காணிக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் நேரில் சென்று, குடிநீர் வினியோகப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். பற்றாக்குறை உள்ள இடங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.
அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு, அடுத்த இரண்டு மாதங்களில் குடிநீர் பற்றாக்குறையால், நம் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

