தமிழகத்தில் தொழில் விளங்குமா? தொழிலாளர்களை துாண்டிவிடும் கட்சிகள் மீது முதல்வர் அதிருப்தி
தமிழகத்தில் தொழில் விளங்குமா? தொழிலாளர்களை துாண்டிவிடும் கட்சிகள் மீது முதல்வர் அதிருப்தி
ADDED : அக் 09, 2024 02:13 AM
சென்னை:சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை விரைவாக முடிவுக்கு கொண்டுவர, முதல்வர் ஸ்டாலின் அமைத்த, மூன்று அமைச்சர்கள் குழு, தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் இடையில், 10 மணி நேரம் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடர்கிறது.
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில், வரும் 21ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதனால், தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் ஏழுகட்ட பேச்சு நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தொழில் துறை அமைச்சர் ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அடங்கிய குழுவை, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார்.
இக்குழு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம், சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் ஆறு மணி நேரம் பேச்சு நடத்தியது.
ஏற்கப்பட்டது
அதில், ஊழியர்கள் வசதிக்காக, 108 குளிர்சாதன வசதி உடைய பஸ்கள் இயக்குவது, 5,000 ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள், நிர்வாகத்தால் ஏற்கப்பட்டன. அதை ஒரு பிரிவு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால், சி.ஐ.டி.யு., சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என, சாம்சங் நிர்வாகம் கூறியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்ப்பு வந்தவுடன், அதன்படி அரசு செயல்படும் என, அமைச்சர்கள்
தொடர்ச்சி 11ம் பக்கம்
சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ராஜா நேற்று அளித்த பேட்டி:
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், முதல்வர் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தொழிலாளர் நலத்துறை சார்பில், ஏழு முறை பேச்சு நடந்தது. அதன்பின்பும் தீர்வு காணப்படாததால், மூன்று அமைச்சர்களை நியமித்து, தீர்வு காண முதல்வர் உத்தரவிட்டார்.
ஆலை நிர்வாகத்துடன் பேசினோம். தொழிலாளர்களுடன், 10 மணி நேரம் பேச்சு நடந்தது. நிர்வாகம், சி.ஐ.டி.யு., மற்றும் இதர சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்களிடம் பேசினோம். வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல், தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களிடம் பேசினோம்.
சி.ஐ.டி.யு., சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர். மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. சி.ஐ.டி.யு., சங்கம் பதிவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு என்ன வருகிறதோ, அதற்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம் என, நிர்வாகத் தரப்பில் தெரிவித்தனர்.
அந்த ஒரு கோரிக்கைக்காக, தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அது எவ்வளவு துாரம் சரியாக இருக்கும் என தெரியவில்லை.
அங்கு பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்தவர்கள், 70,000 ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். ஒருவருக்கு மட்டும், 21,000 ரூபாய் சம்பளம் கொடுக்கின்றனர். அவர் சரியாக பணிக்கு வரவில்லை. மனிதாபிமான அடிப்படையில், வேலையில் இருந்து நீக்கவில்லை என நிர்வாகம் கூறுகிறது.
மற்றவர்கள், 35,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுகின்றனர்; அவர்கள் இந்த பேச்சுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், அதற்கு தீர்வு காணப்படும். இதில் என்ன பிரச்னை உள்ளது, எதற்காக போராட்டத்தை நீட்டிக்கின்றனர் எனத் தெரியவில்லை; நீடிப்பது நல்லதாக இருக்காது.
வேலை செய்யாத ஒவ்வொரு நாளும் சம்பளம் இழப்பாகும். வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

