அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?
அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் திருமா பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?
ADDED : நவ 21, 2024 07:25 PM
அடுத்த மாதம் 6ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும், விஜயும் ஒரே மேடையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆட்சியில் பங்கு கேட்கும் திருமாவளவனும், கூட்டணி கட்சிகளுக்கு பங்கு தர தயாராக உள்ள விஜயும் சந்தித்து விட்டால், தி.மு.க., கூட்டணியில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த சந்திப்பை தவிர்க்குமாறு, தி.மு.க., தரப்பில் இருந்து திருமாவளவனுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், திருமாவளவன் தலைமையில், சென்னையில் நடந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ., சைதை பாலாஜியின் இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இது, இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. இதனால், விஜயுடன் ஒரே மேடையில் பங்ககேற்பதை, திருமாவளவன் தவிர்த்து விடுவார் என தி.மு.க., தரப்பில் அடித்துக் கூறுகின்றனர்.
ஆனால், அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவை, திருமாவளவன் புறக்கணிப்பதை, கட்சியினர் விரும்பவில்லை. தி.மு.க., நிர்பந்தத்திற்காக விழாவை புறக்கணிக்கக் கூடாது என, கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, வி.சி., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
த.வெ.க., கொள்கை தலைவராக அம்பேத்கரை விஜய் ஏற்றுள்ளார். அதனால், விஜய் வருகையை சுட்டிக்காட்டி திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணிக்கக்கூடாது. அப்படி புறக்கணித்தால், அம்பேத்கரின் கொள்கையில் திருமாவளவன் திடமாக இல்லை என்ற பேச்சு எழும். சமூக நீதி கொள்கைகையை நீர்த்து போக செய்து விட்டார் என்ற பேச்சு எழும்.
அதற்கு இடம் தராமல், நுால் வெளியீட்டு விழாவில் திருமாளவன் பங்கேற்க வேண்டும். விஜயுடன் மேடையை பகிர்ந்தால், கூட்டணிக்குள் குழப்பம் வரும் என்றால், அந்த அளவுக்கா கூட்டணிக்குள் முதிர்ச்சியும் பக்குவமும் புரிதலும் இல்லாமல் இருக்கிறது.
அம்பேத்கருக்காக பங்கெடுத்து, அங்கேயே அம்பேத்கரை பற்றி பாடம் எடுத்து, கூட்டணியில் வழக்கம்போல தொடர்வது தான் திருமாவளவனுக்கு நல்லது. அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.
கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடலாம். கவர்னர் தேநீர் விருந்தை கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கும்போது, தி.மு.க., மட்டும் பங்கேற்கலாம். ஆனால், விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி., பங்கேற்க கூடாதா?
இவ்வாறு அந்த நிர்வாகி கேள்வி எழுப்பினார்.
- நமது நிருபர் -