விசிக.,வுக்கு பானை சின்னம் கிடைக்குமா?: இன்றே முடிவெடுக்க உத்தரவு
விசிக.,வுக்கு பானை சின்னம் கிடைக்குமா?: இன்றே முடிவெடுக்க உத்தரவு
ADDED : மார் 27, 2024 01:29 PM

புதுடில்லி: 'பானை சின்னம் தொடர்பான வி.சி.க., மனுவை பரிசீலித்து இன்றே தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டும்' என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது. திருமாவளவன் சிதம்பரம் (தனி) தொகுதியிலும், ரவிக்குமார் விழுப்புரம் (தனி) தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு திமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனிடம் முறையிட்டும் பதில் கிடைக்காத நிலையில் வி.சி.க., டில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசிக தரப்பில், ‛‛ பானை சின்னம் கேட்டு யாரும் விண்ணப்பிக்காததால் தங்கள் கட்சிக்கு அதை ஒதுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டுள்ளது. 2 தேர்தல்களில் அடுத்தடுத்து போட்டியிட்டால் ஏற்கனவே போட்டியிட்ட சின்னத்தை கொடுக்க வேண்டும்'' என வாதிடப்பட்டது.
பின்னர், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி, ‛‛ கடந்த முறை தேர்தல் கமிஷனின் விதிகளை வி.சி.க., பூர்த்தி செய்யவில்லையே?. பானைக்குள் தங்கம் இருக்கிறதா என தெரியவில்லையே'' என தெரிவித்தார். இதையடுத்து பானை சின்னம் தொடர்பான வி.சி.க., மனுவை பரிசீலித்து இன்றே தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

