ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி: போலீசில் புகார்
ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி: போலீசில் புகார்
ADDED : ஜூலை 16, 2025 07:18 AM

விழுப்புரம் : 'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில், ஒட்டு கேட்பு கருவி வைத்தவர்களை கண்டறிய வேண்டும்' என, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில் நடந்த வன்னியர் சங்க பொதுக்குழுவில் பங்கேற்ற பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், வீட்டில் தன் இருக்கைக்கு அருகே ஒட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, 12ம் தேதி சென்னையை சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவன அதிகாரிகள், அந்த ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்தனர். 'ஆய்வறிக்கை வந்த பின்னே நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ம.க., தலைமை நிலைய செயலர் அன்பழகன், விழுப்புரம் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரனிடம் நேற்று புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டில், அவரின் இருக்கைக்கு அருகே ஒட்டு கேட்பு கருவி வைத்தது யார் என கண்டறிய வேண்டும். இதில், 'லைகா' நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்று இருந்துள்ளது. இந்த ஒட்டு கேட்பு கருவியை, 100 மணி நேரத்திற்கு ஒரு முறை 'சார்ஜ்' செய்ய வேண்டும் என ஆய்வு செய்த தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை யார் செய்தது, இவர்கள் இந்த ஒட்டு கேட்பு கருவி மூலம் யாருக்கு தகவலை அனுப்பியுள்ளனர், எதற்காக செய்தனர் என்பது பற்றி ராமதாசுக்கு தெரிய வேண்டும். இதை போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.