கனவுகளுடன் உழைப்பும் அவசியம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை
கனவுகளுடன் உழைப்பும் அவசியம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:40 PM
சென்னை: ‘‘கனவுகளுடன், மாணவர்கள் உழைப்பையும் வழங்க வேண்டும்,’’ என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கான, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று பேசியதாவது:
என்னுடைய பள்ளிப்பருவ காலத்தில், நான், 10ம் வகுப்பு தாண்டுவதற்கே சிரமப்பட்டேன். பின், பிளஸ் 2 முடித்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர். அதிலும், தேர்ச்சி பெற்றேன். என்னுடைய தந்தை, பி.ஏ., தமிழ் உட்பட சில படிப்புகளை எனக்கு பரிந்துரை செய்தார். இன்ஜினியரிங் படிப்பு பக்கம் சென்று விடாதே என்றும் கூறினார்.
என்னை குறைத்து மதிப்பிட்டு விட்டாரோ என நினைத்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். இன்ஜி., மாணவர்கள் நான்கு ஆண்டுகளில் புதிதை கண்டுபிடிப்பர். ஆனால், நான் நான்கு நாட்களில் ஒன்றை கண்டுபிடித்தேன். அதாவது, நான் இன்ஜினியராவது கடினம் என்று கண்டுபிடித்தேன். பின், படித்தும் முடித்தேன். வாழ்க்கையில், மாணவர்கள் கனவு காணலாம். ஆனால், அதை அடைய கொஞ்சம் உழைப்பையும் செலுத்த வேண்டும். அதேபோல தன்னம்பிக்கையும் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
