மக்கள் ஆசியுடன் 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்போம்: மோடி
மக்கள் ஆசியுடன் 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்போம்: மோடி
ADDED : ஜன 20, 2024 01:45 AM

சோலாபூர், ''உலக பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் முதல் மூன்று நாடுகளின் பட்டியலில், நம் நாட்டைச் சேர்ப்பதே மோடியின் உத்தரவாதம். ராம ராஜ்ஜியத்தின் நேர்மையான கொள்கையால் ஈர்க்கப்பட்ட இந்த அரசு, மக்கள் ஆசியுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து உத்தரவாதத்தை நிறைவேற்றும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மகிழ்ச்சி
மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில், 'அம்ருத்' எனப்படும், புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தின் கீழ், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், நகர்ப்புறங்களுக்கான பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மஹாராஷ்டிராவில் கட்டி முடிக்கப்பட்ட 90,000 வீடு களை பயனாளர்களிடம் ஒப்படைத்தார்.
சோலாப்பூரின் ராய்நகர் ஹவுசிங் சொசைட்டியில் கட்டி முடிக்கப்பட்ட 15,000 வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைத்தார்.
தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கடன் தவணைகளை 10,000 பயனாளர்களுக்கு பிரதமர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
வீடு கிடைக்கப் பெற்ற அனைவரும், வரும் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று தங்கள் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும். அது உங்கள் வாழ்வில் இருந்து வறுமையை ஒழிக்க உத்வேகத்தை தரும்.
தன்னை சார்ந்த மக்களை மகிழ்விக்கும் பணியை ராமபிரான் செய்தார். ஏழைகளின் நலன் மற்றும் அவர்களுக்கு அதிகாரமளிக்கும் பணியை இந்த அரசு அர்ப்பணிப்புடன் செய்து வருகிறது. உங்கள் கஷ்டங்களை குறைப்பதற்காகவே இந்த திட்டங்கள் துவக்கப்பட்டன.
இந்த வசதிகள் இல்லாதது ஏழைகளை, குறிப்பாக பெண்களை அவமதிக்கும் வகையில் இருந்ததால், 10 ஆண்டுகளில் வீடுகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அரசு நலத்திட்டம்
இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக மக்களின் வங்கி கணக்குகளில் 30 லட்சம் கோடி ரூபாய் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 25 கோடி மக்கள் அடுத்த ஐந்து ஆண்டு களில் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்படுவர்.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் நம் நாட்டை சேர்ப்பதே மோடியின் உத்தரவாதம். அதை உங்கள் ஆசியுடன் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் செய்து முடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.