ADDED : ஜன 07, 2024 11:36 PM

திண்டுக்கல் : ''லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்,'' என, திண்டுக்கல்லில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறினார்.
அவர் கூறியதாவது: மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே பா.ம.க., கொள்கை. இன்றைய நிலையில் தமிழக முழுதும் வீடு வீடாக மது விற்பனை செய்யப்படுகிறது.
போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் போலீசாருக்கு பதவி உயர்வு என அறிவித்தால், மது விற்பனையை தடுக்க முடியும். ஒருவேளை அப்படி நடந்தால் கொலை, கொள்ளை இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும்.
தனியார் தொழிற்சாலைகளில் மண்ணின் மைந்தர்களுக்கு கல்வித் திறன் அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
லோக்சபா தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்வார். திண்டுக்கல் தொகுதியில் ஏற்கனவே பா.ம.க., போட்டியிட்டது.
அதனால், இம்முறையும் கூட்டணி கட்சிகளிடம் பேசி திண்டுக்கல் தொகுதியை மீண்டும் பெற்று, அங்கு பா.ம.க., வேட்பாளரை நிறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.