பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; இரண்டாம் கணவர் கைது!
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; இரண்டாம் கணவர் கைது!
UPDATED : மே 06, 2025 06:55 PM
ADDED : மே 06, 2025 09:42 AM

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த பெண்ணை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது இரண்டாம் கணவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசிக்கும் பாலன் மனைவி சரண்யா, 35, நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனுடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2021ல் சண்முக சுந்தரம் என்பவர் இறந்துவிட்ட நிலையில், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன், 45, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதய சூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
நேற்று இரவு பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர். சரண்யா கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது சரண்யா வீட்டிற்கு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்து மற்றும் தலையின் பின்பக்கத்தில் வெட்டப்பட்டதால் தலை துண்டானது.
இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சரண்யா, பா.ஜ., கட்சியில் நிர்வாகியாக இருந்தவர் என்பதால், அந்த கட்சியின் முன்னணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
துப்பு துலங்கியது
இந்நிலையில் கொலைக்கான காரணம் பற்றி விசாரித்த போலீசார், சரண்யாவின் இரண்டாம் கணவருக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். அவரது பெயரில் இருந்த 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை, தன் முதல் மனைவியின் மகன் கபிலனுக்கு பாலன் எழுதி வைத்தார்.இதற்கு சரண்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாலன், தன் முதல் மனைவியின் மகன் கபிலன், அவரது நண்பர்கள் குகன், பார்த்திபன் உதவியுடன் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாலன் உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.
அமைச்சர் கார் மீது செருப்பு வீசியவர்
சரண்யா மதுரையில் வசித்தபோது பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்துள்ளார். அரசியலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த சரண்யா, அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.