வேலைக்கு சேர்ந்த நாளிலேயே வீட்டில் திருடிய பெண் சிக்கினார்
வேலைக்கு சேர்ந்த நாளிலேயே வீட்டில் திருடிய பெண் சிக்கினார்
ADDED : மார் 04, 2026 02:38 AM

புதுடில்லி : அவுட்டர் டில்லியில் உள்ள வீடு ஒன்றில் பணிக்கு சேர்ந்த நாளிலேயே, அனைவருக்கும் துாக்க மாத்திரை கலந்து கொடுத்து, துாங்க வைத்து விட்டு, 40 ஆயிரம் ரூபாயுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஸ்சிம் விஹார் என்ற இடத்தில் தொழிலதிபர் வீடு உள்ளது. அந்த வீட்டில், உடல் நலமில்லாத, 60 வயது நபரை, வீட்டிலிருந்து கவனித்துக் கொள்ள, பெண் ஒருவரை வீட்டினர் நியமித்தனர்.
அந்த பெண், கடந்த மாதம், 25ம் தேதி, பணிக்கு சேர்ந்தார். முதல் நாள் இரவிலேயே வீட்டில் உள்ள நான்கு பேருக்கும், துாக்க மருந்தை உணவில் கலந்து கொடுத்துள்ளார். அனைவரும், துாங்கிய பின், 40 ஆயிரம் ரூபாயுடன் ஓட்டம் பிடித்தார்.
அவர் தான் அனைவருக்கும் துாக்கம் வரவழைக்கும் மாத்திரையை கலந்து கொடுத்து இருந்தார் என்பதை அறிந்த வீட்டினர், மறுநாள் காலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த வீட்டுக்கு வந்த போலீசார், மிச்சமான உணவை எடுத்து, தடய அறிவியல் சோதனை செய்தனர்.
அனைவருக்கும், ஒரே விதமான மயக்க மருந்தை கொடுத்து, துாங்க வைத்து விட்டு, வீட்டின் அலமாரியில் இருந்த, 40 ஆயிரம் ரூபாயுடன் அந்த பெண் ஓட்டம் பிடித்தார் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
அவரை பணிக்கு அனுப்பிய ஏஜன்சிக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். கடந்த மாதம், 26ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

