2 வயது குழந்தையை விற்க முயன்ற பெண் சிக்கினார்; இரு குழந்தை மீட்பு
2 வயது குழந்தையை விற்க முயன்ற பெண் சிக்கினார்; இரு குழந்தை மீட்பு
ADDED : ஜூலை 26, 2025 02:10 AM

சென்னை, ஜூலை 26-
புழல் அருகே, ஆண் குழந்தையை விற்க முயன்ற பெண் சிக்கினார். குழந்தையின் தாய் உட்பட இருவரிடம் விசாரணை நடக்கிறது.
புழல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், வீடு வாடகை, லீசுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்கிறார். இவரை, பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.
தன்னிடம் இரண்டு வயதான ஆண் குழந்தை உள்ளதாகவும், 12 லட்சம் ரூபாய்க்கு விற்க உள்ளதாகவும் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த கார்த்திக், புழல் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
போலீசார் ஆலோசனையின்படி, குழந்தையை வாங்குவது தொடர்பாக மொபைல் போனில், அப்பெண்ணுடன் கார்த்திக் பேரம் பேசியுள்ளார்.
இதை நம்பிய அப்பெண், புழல், பிரிட்டானியா நகருக்கு ஆண் குழந்தையுடன் வருவதாக கார்த்திக்கிடம் கூறினார். குறிப்பிட்ட இடத்தில் கார்த்திக்கை நிற்க வைத்து, போலீசார் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.
அங்கு குழந்தையை விற்க வந்த பெண்ணை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டது அம்பத்துார், மோனாம்பேடு பகுதியைச் சேர்ந்த வித்யா, 36, என்பதும், அவருக்கு அறிமுகமான ரதிதேவி, 39, என்பவரின் குழந்தையை விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
இதில், குழந்தையின் தாய்க்கு 10 லட்சம் ரூபாய், விற்றுத் தருபவருக்கு 2 லட்சம் ரூபாய் என, பேரம் பேசப்பட்டுள்ளது.
வித்யா அளித்த தகவலின்படி, வித்யாவின் வீட்டில் இருந்த ரதிதேவியிடமும், அவரது தோழி தீபா என்பவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
வித்யாவிடம் இருந்த ஆண் குழந்தை மற்றும் வீட்டில் இருந்த 2 வயது பெண் குழந்தையையும் போலீசார் மீட்டனர்.
கணவரை பிரிந்து வாழும் ரதிதேவி, குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை விற்க நினைத்து, தோழி தீபா மூலம் வித்யாவிடம் கொடுத்தது தெரியவந்தது.
வித்யாவின் மொபைல்போனை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.