ADDED : செப் 04, 2025 02:05 AM
சென்னை:மழைநீர் வடிகால்வாயின் வண்டல் வடிகால் தொட்டிக்குள் விழுந்ததால் தான் பெண் உயிரிழந்தார் என்பது, 'சிசிடிவி' பதிவுகளில் தெரியவந்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம், வரதராஜப்பேட்டை வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் தீபா,41. வீட்டு வேலை தொழிலாளியான தீபா, சென்னை அண்ணா நகர், வீரபாண்டி நகர் முதல் தெருவில் உள்ள, மழைநீர் வடிகால்வாயின் இணைப்பாக உள்ள வண்டல் வடி தொட்டிக்குள் தலைகீழாக இறந்து கிடந்தார்.
'சிறி ய அளவிலான இந்த தொட்டிக்குள் விழ வாய்ப்பு இல்லை; மர்ம நபர்கள் கொலை செய்து, அந்த தொட்டிக்குள் திணித்து இருக்கலாம்' என, சந்தேகம் எழுந்தது. இதனால், சூளைமேடு போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தீபாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கே.கே., நகரில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், தீபாவின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிர் பிரிந்து இருப்பது தெரியவந்து இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்த போது, நேற்று முன் தினம், இரவு, 12:30 மணியளவில் தீபா தொட்டிக்குள் விழும் காட்சிகள் பதிவாகி இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், தீபாவின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.