நடவடிக்கை எடுக்காத போலீஸ் டி.ஜி.பி.,யிடம் பெண் மனு
நடவடிக்கை எடுக்காத போலீஸ் டி.ஜி.பி.,யிடம் பெண் மனு
ADDED : செப் 09, 2025 03:06 AM

சென்னை : 'ஆடையை கிழித்து, அடித்து உதைத்த நபர் மீதும், அவரது மனைவி மீதும், ஜூலை மாதம் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' என, டி.ஜி.பி., அலுவலகத்தில், பெண் ஒருவர் மனு அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள தாமரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா, 42. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள மனு:
கடந்த ஜூலை 22ம் தேதி காலையில், எனக்கும், எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரியதர்ஷிணி என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது, மொபைல் போன் வாயிலாக, பிரியதர்ஷிணி தன் கணவர் திவ்யனை சம்பவ இடத்திற்கு அழைத்தார்.
அங்கு வந்த அவர், வீட்டின் உள்ளே இருந்த என் ஆடைகளை கிழித்து, தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச்சென்று, கடுமையாக தாக்கினார். தடுக்க முயன்ற என் அம்மாவையும், பிரியதர்ஷிணி அடித்து உதைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, திமிரி காவல் நிலையம், ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகம், வடக்கு மண்டல ஐ.ஜி., அலுவலகம் மற்றும் தபால் வாயிலாக முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்தேன்; நடவடிக்கை இல்லை. இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.