17 வயது சிறுவன் ஓட்டிய கார் வீட்டுக்குள் புகுந்து பெண் உயிரிழப்பு
17 வயது சிறுவன் ஓட்டிய கார் வீட்டுக்குள் புகுந்து பெண் உயிரிழப்பு
ADDED : ஏப் 15, 2025 03:50 AM

பவானி: பவானியில், 17 வயது மாணவன் ஓட்டிய கார், நள்ளிரவில் குடிசை வீட்டுக்குள் புகுந்ததில் பெண் பலியானார்.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த மூன்றுரோடு, ஜல்லிகல்மேடு அருகே பவானி - மேட்டூர் சாலையோரத்தில் உள்ள குடிசை வீட்டுக்குள், நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில், 'ஹோண்டா சிட்டி' கார் அதிவேகத்தில் புகுந்தது. இதில், வீட்டுக்குள் துாங்கிக் கொண்டிருந்த கற்பகவல்லி, 35, பரிதாபமாக பலியானார்.
அவரது கணவர் கருப்பணன் வீட்டுக்கு வெளியே துாங்கியதால் உயிர் தப்பினார். காரை ஓட்டி வந்தது, 17 வயதான பாலிடெக்னிக் மாணவன் என்பதும், சிறுவனின் தந்தை விஜய் ஆனந்த், திருப்பூரை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
கோவையில் தனியார் கல்லுாரியில் படிக்கும் மாணவன், விடுமுறை என்பதால் பவானியில் உள்ள மாமா வீட்டுக்கு வந்துள்ளார். நள்ளிரவில் வீட்டில் அனைவரும் துாங்கிய நிலையில், அவரது ஹோண்டா சிட்டி காரை எடுத்து வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தில் மாணவனுக்கும் காயம் ஏற்பட்டது. காரில் ஏர் பேக் திறந்ததால், சிறு காயத்துடன் தப்பியுள்ளார். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல், பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.