ADDED : நவ 07, 2025 07:48 PM
கோவை: கோவையில் பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை போலீசார் மறுத்துள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறை பார்த்தவர் தவறாக கருதி கடத்தல் நடந்ததாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு( நவ.,06) அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசியவர்கள், கோவை இருகூர் பகுதியில் காரில் இளம்பெண்ணை கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அப்பகுதி முழுவதும் தேடினர்.
இந்நிலையில் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காரில் எந்த பெண்ணும் கடத்தப்படவில்லை. புகார் கூறப்பட்ட காரில் பயணித்தவர்கள் இருகூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர். பொருட்கள் வாங்குவதில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காரை நிறுத்திவிட்டு அவர்களுக்குள் வாய்த்தகராறு நடந்துள்ளது. அப்போது காரை எடுத்துச் செல்லும்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கூச்சலை கண்ட அங்கிருந்த நபர் ஒருவர், பெண்ணை காரில் கடத்துவதாக கருதி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகராறு குறித்து குடும்பத்தினரிடம் கூறாததால் யாருக்கும் தெரியவில்லை. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபரிடம் விசாரித்த போது காரில் பெண் கடத்த்பபட்டதை பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினரின் நலன் கருதி, அவர்களின் விவரம் வெளியிடப்படவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

