காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் பாதிப்பு; கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பெண்
காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம் பாதிப்பு; கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட பெண்
ADDED : டிச 05, 2024 06:13 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், கயத்தாறு தாலுகாக்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் பயிர்களை மான், பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு சேதமடையும் பயிர்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.துரைச்சாமிபுரத்தில் தேவி என்பவர், 42 ஏக்கரில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்களை காட்டு பன்றிகள் சில நாட்களாக சேதப்படுத்தின. பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், அதை பார்த்து விவசாயி தேவி கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிலத்தை சுற்றி வலை போட்டு வைத்துள்ளனர். அதையும் சேதப்படுத்தி விட்டு காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அழித்து வருகின்றன.
எட்டையபுரம் தாலுகா சிந்தலக்கரை பஞ்., பகுதியில் எஸ். துரைச்சாமிபுரம், சிந்தலக்கரை, மேல நம்பிபுரம், முத்துலாபுரம், கோட்டூர், பொன்னையாபுரம், ராசாப்பட்டி, பேரிலோவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது.
தற்போது, மக்காச்சோள பயிர் நன்கு வளர்ந்து, மகசூல் எடுக்கும் நிலையில் காட்டுப் பன்றிகள், பல்வேறு இடங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.