தவறான சிகிச்சையால் பெண் பலி? உறவினர்கள் மறியலால் பரபரப்பு!
தவறான சிகிச்சையால் பெண் பலி? உறவினர்கள் மறியலால் பரபரப்பு!
ADDED : ஜன 28, 2024 11:39 PM

ஈரோடு : ஈரோடு, திண்டல், பழனிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம் மனைவி வளர்மதி, 44. காது வலியால் அவதிப்பட்ட அவர், ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் 10ம் தேதி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மீண்டும், 20ம் தேதி காதுவலியுடன் காய்ச்சல் ஏற்பட, உள்நோயாளியாக, 23ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, மகன் சஞ்சய், 23, வெளியே சென்று, 20 நிமிடம் கழிந்து வந்த போது, அவரிடம், வளர்மதி இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தன்னிடம் நன்றாக பேசிய தாய், 20 நிமிடத்தில் இறந்ததாக கூறியதால், சஞ்சய் அதிர்ச்சி அடைந்தார். உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். நள்ளிரவில் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
சூரம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். 'தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உறவினர்கள் கோரினர்.
வளர்மதியின் உறவினர்கள், மருத்துவமனை முன் நேற்று மதியம் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். 'தவறான சிகிச்சையளித்த மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும்; சிகிச்சை அளித்த டாக்டரை கைது செய்ய வேண்டும்' என கோஷமிட்டனர்.
இதனால், 40 நிமிடங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சு நடத்தியும் பலனில்லாததால், 23 பெண்கள் உள்ளிட்ட, 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, வளர்மதியின் மகன் சஞ்சய், சூரம்பட்டி போலீசில், அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் செய்துள்ளார்.