ரயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு துர்நாற்றத்தால் சென்ட்ரலில் பரபரப்பு
ரயில் பெட்டியில் பெண் சடலம் மீட்பு துர்நாற்றத்தால் சென்ட்ரலில் பரபரப்பு
ADDED : ஆக 13, 2025 04:03 AM
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 14 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், அழுகிய பெண் சடலம் மீட்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின், முதல் நடைமேடை அருகே நிறுத்தப்பட்டிருந்த, ரயில் பெட்டியில் இருந்து துார்நாற்றம் வீசுவதாக, ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் புகார் வந்தது.
போலீசார் விரைந்து சென்று, ரயில் பெட்டியை திறந்த பார்த்த போது, அதில் அழுகிய நிலையில், ஒரு பெண் உடல் இருப்பதை கண்டனர். உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, ரயில்வே போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயில் என்பதும், இறந்தவர், 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் தெரியவந்தது.
ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, கடந்த மாதம், 29ம் தேதி விரைவு ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலில் பயணியர் நெரிசலை குறைக்க, கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப் பட்டிருந்தது.
சில காரணங்களுக்காக, அந்த பெட்டியை மட்டும் ரயிலில் இருந்து கழற்றி, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை அருகே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். அந்த பெட்டியில் தான், இறந்த பெண் பயணம் செய்துள்ளார்.
இது குறித்து, ரயில்வே போலீசார் கூறியதாவது:
விரைவு ரயிலில் கூடுதலாக இணைக்கப்பட்ட, இந்த பெட்டியை சோதனை செய்து நிறுத்தி இருந்தால், 14 நாட்களுக்கு பின், அழுகிய நிலையில் உடலை மீட்கும் நிலை ஏற்பட்டு இருக்காது.
இறந்தவர் பிச்சை எடுப்பவர். அவர் இயற்கை மரணம் அடைந்தது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர் எந்த ஊரை சேர்ந்தவர், எங்கிருந்து இந்த ரயில் பெட்டியில் பயணம் செய்தார் என, விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.