வரதட்சணையால் பெண் தற்கொலை விவகாரம்: கணவர் உட்பட 3 பேர் கைது
வரதட்சணையால் பெண் தற்கொலை விவகாரம்: கணவர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஆக 07, 2025 02:03 PM

திருப்பூர்: திருப்பூரில் திருமணமாகி 11 மாதத்தில் ப்ரீத்தி,27, என்ற இளம்பெண் தற்கொலை செய்தார். இந்த வழக்கில் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்தனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுகந்தி; கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் ப்ரீத்தி, 27, பி.பி.ஏ., பட்டதாரி. இவருக்கு 2024, செப்., ஈரோட்டை சேர்ந்த சதீஸ்வர் என் பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 120 சவரன் நகை, 25 லட்சம் ரூபாய் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டன.
கடந்த மாதம், 11ல் தாய் வீட்டுக்கு ப்ரீத்தி வந்தார். சின்னக்கரையில் உள்ள சாய ஆலையை, 1.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததன் மூலம், சுகந்திக்கு, 50 லட்சம் ரூபாய் கிடைத்தது. தகவலறிந்த ப்ரீத்தியின் கணவர், ப்ரீத்தியை போனில் தொடர்பு கொண்டு, வீடு கட்டுவதற்காக, 50 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார். 'தனிக்குடித்தனம் சென்றால், பணத்தை வாங்கி வருகிறேன்' என, கணவரிடம் ப்ரீத்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது ப்ரீத்தி துாக்கு மாட்டி இறந்தார். வரதட்சணை கொடுமையால் ப்ரீத்தி தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த வழக்கில் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரை கைது செய்தனர்.