'விடாமுயற்சி இருந்தால் பெண்கள் எந்த உச்சத்தையும் அடையலாம்!'
'விடாமுயற்சி இருந்தால் பெண்கள் எந்த உச்சத்தையும் அடையலாம்!'
ADDED : மார் 08, 2024 01:52 AM

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வரும் நிலையில், ராணுவ அதிகாரி பயிற்சி முடித்த, கிராமத்து இளம்பெண் சரண்யா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மினார்வா ஆகியோர், லெப்டினென்டாக பதவியேற்று, நாட்டை காப்பாற்றும் பொறுப்பேற்க உள்ளனர்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் மகளிருக்கு முன் உதாரணமாக விளங்கும் சரண்யா கூறியதாவது:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள நஞ்சமடைகுட்டை கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவள் நான். ஆறாம் வகுப்பில் இருந்து விளையாட்டில் ஆர்வம் அதிகரித்தது; கபடி விளையாட துவங்கினேன்.
எங்கள் கிராமத்தில் இளம்பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. வீடுகளை விட்டு வெளியேற முடியாது; பெரிய கனவுகளையும் காண முடியாது. ஒரு இலக்கை நிர்ணயித்து அடைய, அவர்களின் திறனை வெளிப்படுத்த, சந்தர்ப்பம் தரப்படுவது இல்லை.
விதிவிலக்கு
பள்ளிப் படிப்பை முடிக்கும் முன், திருமணம் செய்து வைக்கும் கிராம பாரம்பரிய பழக்கம் உண்டு. அந்த வழக்கத்தை மாற்றி, அங்குள்ள பெண்களுக்கும் ஒரு விருப்பம், நோக்கம், இலக்கு உள்ளதை குடும்பத்தார் புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால், நல்லவேளையாக என் பெற்றோர் இதில் விதிவிலக்கு.
என் நிலைப்பாட்டை அவர்களிடம் கூறினேன்; சம்மதித்தனர். குடும்பத்தில் முதல் பெண் பட்டதாரியானேன். காக்னிசன்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது; ஆறு மாதங்கள் பணிபுரிந்தேன். ஆனாலும், இது போதாது என்று முடிவு செய்தேன். என் தோழி கல்லுாரி என்.சி.சி.,யில் இருந்த போது, தேசப்பற்று, சேவை குறித்து அடிக்கடி கூறுவாள்; அது, என் மனதில் ஆணிவேராக பதிந்தது.
11 மாத பயிற்சி
ராணுவ அதிகாரியாக பணியாற்ற விரும்பினேன். அதற்கான தேர்வுக்காக கோவையில் தங்கி, வேலை பார்த்தபடி பயிற்சி வகுப்புகள் சென்றேன். ஐந்து முறை தேர்வு எழுதி இறுதியாக வெற்றி பெற்றேன். தற்போது, 11 மாத கடும் பயிற்சிக்கு பின், லெப்டினென்டாக பொறுப்பேற்க உள்ளேன்.
விடாமுயற்சி, சிறந்த நோக்கம் மட்டும் இருந்தால், வாழ்நாளில் பெண்கள் எந்த உச்சத்தையும் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- -நமது நிருபர்- -

