கட்சியில் மாவட்ட தலைவர்கள் தேர்வு; பெண்களுக்கு வாய்ப்பு: காங்., செயலர்
கட்சியில் மாவட்ட தலைவர்கள் தேர்வு; பெண்களுக்கு வாய்ப்பு: காங்., செயலர்
ADDED : நவ 25, 2025 05:37 AM

சென்னை: ''தமிழக காங்., மாவட்டத் தலைவர் தேர்வில், மகளிருக்கு முக்கியத்துவம் இருக்கும்,'' என, அகில இந்திய காங்கிரஸ் செயலர் சலீம் அகமது கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், 'சங்கதன் சன் அபியான்' திட்டத்தின்படி, புதிய மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்யும் பணி, தமிழகம் முழுதும் நடந்து வருகிறது.
தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவராக, தற்போது வழக்கறிஞர் முத்தழகன் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, மாவட்டத் தலைவராக உள்ளார்.
ஐந்தாண்டுகள் வரை மாவட்டத் தலைவராக இருக்கலாம் என்பதால், மீண்டும் தலைவராக முத்தழகனுக்கு வாய்ப்பு உள்ளது.
அதேசமயம், மாவட்டத் தலைவர் பதவிக்கு, சில நிர்வாகிகள் விண்ணப்ப மனு வழங்கி இருப்பதால், போட்டி உருவாகி உள்ளது.
தென் சென்னை மத்திய மாவட்டத்திற்கு, மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள, அகில இந்திய காங்கிரஸ் செயலர் சலீம் அகமது, நேற்று கே.கே.நகரில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதன்பின், அவர் கூறுகையில், ''குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாவட்டத் தலைவர் பதவியை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.
''புதிய மாவட்டத் தலைவர் தேர்வில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்,'' என்றார்.

