மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை அமைச்சர் கீதா ஜீவனை சூழ்ந்த பெண்கள்
மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை அமைச்சர் கீதா ஜீவனை சூழ்ந்த பெண்கள்
ADDED : அக் 12, 2025 12:48 AM

துாத்துக்குடி: 'மகளிர் உரிமைத் தொகைக்கு பலமுறை விண்ணப்பம் செய்தோம்; தகுதி இருந்தும் எங்களுக்கு கிடைக்காதது ஏன்?' என கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவனிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர்.
துாத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டி அருகே கொடுக்கம்பாறை பஞ்சாயத்திற்குட்பட்ட விஜயாபுரி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பலர், தங்கள் கிராமத்தில் குடிதண்ணீர் பிரச்னை இருப்பதாகவும், சில இடங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் நீடிப்பதாகவும் கூறினர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதாகவும் பெண்கள் குற்றஞ் சாட்டினர்.
பதில் அளிக்கத் திணறிய அமைச்சர் கீதா ஜீவன், 'குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது' என பொதுவான பதில் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் தவிர மற்ற புழக்கத்திற்காக போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
அப்போது, குறுக்கிட்ட பெண் ஒருவர், 'பல முறை மனு அளித்தும், தகுதி இருந்தும் இதுவரை மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை' என குற்றஞ்சாட்டினார். அவரைத் தொடர்ந்து, பெண்கள் பலரும் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைக்கவில்லை என அமைச்சரிடம் புகார் கூறினர்.
இதையடுத்து பதிலளித்த கீதா ஜீவன், 'முதியோர் உதவித் தொகை அல்லது மகளிர் உரிமைத் தொகை என ஏதாவது ஒன்றுதான் ஒரு வீட்டிற்கு வழங்கப்படும்.
இருந்தாலும், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில் எல்லோருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்' எனக் கூறி சமாளித்தார்.