'அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்படுவர்'
'அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்படுவர்'
ADDED : செப் 24, 2024 08:12 PM

சென்னை:''தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து, அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் தவறி விட்டார்,'' என, அ.தி.மு.க., மகளிர் அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிராக, அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், சென்னையில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிர் அணி செயலர் வளர்மதி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், வளர்மதி பேசியதாவது:
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு, போதைப் பொருட்களே காரணமாக உள்ளது. அவற்றை ஒழிக்க அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அதை கேட்கவில்லை. தி.மு.க., அரசு பாராமுகமாக இருப்பதை கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி, ஒரத்தநாட்டில் கூட்டு பலாத்காரம் என, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான, பாலியல் தொந்தரவுகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம். இவற்றை கட்டுப்படுத்த முதல்வர் தவறி விட்டார். இவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான், தமிழகத்தில் பெண்கள் மதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.