ADDED : ஜன 23, 2025 12:36 AM

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் விசைத்தறி பெண் தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படும் கூலி உயர்வு ஒப்பந்தம், டிசம்பர் 31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வு கேட்டு ஜனவரி 1 முதல், வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், டி.சுப்புலாபுரத்தில் பெண் விசைத்தறி தொழிலாளர்கள் வீடு வீடாக அரிசி சேகரித்து, மாணிக்க சுவாமி கோவில் முன் சமைத்து தெருவில் அமர்ந்து சாப்பிட்டு, தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். கஞ்சி தொட்டி போராட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
பெண் தொழிலாளர்கள், 'எங்கள் நிலைமையை அரசுக்கு தெரிவிக்கவே இந்த போராட்டம்' என்றனர்.

