ADDED : அக் 17, 2024 09:59 PM
சென்னை:தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவி தவிர, மற்ற நிர்வாகிகள் பதவிகள் அனைத்தும் கலைக்கப்பட்டுள்ளன.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியாக, ஹசீனா சையது நியமிக்கப்பட்டதும், மாவட்ட வாரியாக, சுற்றுப்பயணம் சென்றார். அவரது தலைமையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, செப்., 15ல் துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. இரண்டாவது கட்டமாக, அக்., 1 முதல், கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் மாநிலத் தலைவிகள் அனைவரும், தலா 1,000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மாநில துணைத் தலைவர்கள் 500; பொதுச்செயலர்கள் 250; செயலர்கள் 100; இணை செயலர்கள் 50; மாவட்டத் தலைவிகள் 100; சட்டசபை தொகுதி தலைவிகள் 50; பூத் கமிட்டி உறுப்பினர்கள் தலா 10 உறுப்பினர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், தமிழக மகளிர் காங்கிரசில், மாநிலத் தலைவி பதவி தவிர, மற்ற நிர்வாகிகளின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும், அதிக உறுப்பினர்கள் சேர்த்தவர் அடிப்படையில், புதிய கமிட்டி அமைக்கப்படும் என, ஹசீனா சையது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நிர்வாகிகளாக இருந்தவர்கள் முதல் புதிதாக நிர்வாகப் பொறுப்புக்கு வரத் துடிப்போர் வரை அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை முயற்சியில் தீவிரமாகி உள்ளனர்.