மகளிர் உரிமை தொகை 1500 ரூபாயாக அதிகரிப்பு தீபாவளிக்கு பட்டுச்சேலை, பொங்கலுக்கு ரூ.2500 வாக்குறுதிகளை அள்ளி வீசிய பழனிசாமி
மகளிர் உரிமை தொகை 1500 ரூபாயாக அதிகரிப்பு தீபாவளிக்கு பட்டுச்சேலை, பொங்கலுக்கு ரூ.2500 வாக்குறுதிகளை அள்ளி வீசிய பழனிசாமி
ADDED : ஆக 21, 2025 02:02 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஜூலை 7 முதல் 34 நாட்களில், தமிழகத்தின் 100 சட்டசபை தொகுதிகளில் பிரசார பயணம் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, கடந்த ஜூலை 7ம் தேதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி துவங்கினார். இதுவரை கோவை, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள, 100 சட்டசபை தொகுதிகளில், அவர் பிரசார பயணத்தை முடித்துள்ளார்.
பயணத்தின்போது, 'தாலிக்கு தங்கம்; மருத்துவம், பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு; அம்மா உணவகம்; அம்மா கிளினிக்; இலவச லேப்-டாப்; இலவச ஆடு மாடு' என அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை பேசினார்.
அதேபோல, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகை 1500 ரூபாயாக அதிகரிப்பு; பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2500 ரூபாய்; தீபாவளிக்கு இலவச பட்டுச்சேலை' என வாக்குறுதிகளையும் அளித்தார்.
தி.மு.க., அரசை கடுமையாக சாடிய பழனிசாமி, வி.சி., தலைவர் திருமாவளவன், இ.கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆகியோரையும் விமர்சித்தார். அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் மேலும் கட்சிகள் இணையும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.