மகளிர் உரிமை தொகை, எஸ்.ஐ.ஆர்., சரிபார்ப்பு: கூட்டுறவு ஊழியர்கள் எதிர்ப்பு
மகளிர் உரிமை தொகை, எஸ்.ஐ.ஆர்., சரிபார்ப்பு: கூட்டுறவு ஊழியர்கள் எதிர்ப்பு
ADDED : நவ 28, 2025 11:23 PM
விருதுநகர்: ''மகளிர் உரிமை தொகைதிட்ட, எஸ்.ஐ.ஆர்., சரிபார்ப்பு பணிகளை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் கொண்டு செய்ய நிர்பந்திப்பதை கைவிட வேண்டும்,'' என, விருதுநகரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்கப் பணியாளர் சங்கத்தின்(டாக்பியா) மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4500க்கும் மேற்பட்ட நகர, தொடக்க கூட்டுவு கடன் சங்கங்களும் இவற்றின் கட்டுப்பாட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும், அவற்றின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிகின்றனர்.
தேர்தல் பணிகளை இதுவரை உள்ளாட்சி, கல்வித்துறை அலுவலர்கள் செய்து வந்த நிலையில் இப்போது எங்களை ஈடுபடுத்துவது கூடுதல் பணிச்சுமையாக உள்ளது. மகளிர் உரிமை திட்டத்தை பொறுத்தவரை வருவாய்த்துறையினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு விண்ணப்பதாரர் நிலச்சுவான்தாரரா அல்லது சொந்தமாக கார் வைத்திருக்கிறாரா உள்ளிட்ட புள்ளி விவரம் அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடமே உள்ளது. கடன் சங்க ஊழியர்கள் இதுகுறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சங்கத்தின் அன்றாட பணிகளான விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கும் பணி, மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் பணி உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்கு உள்ளாவதுடன் வங்கி சார்ந்த அன்றாட வரவு செலவுகள் பாதிக்கப்படும். விற்பனையாளர்களை பணியில் ஈடுபடுத்துவதால் ரேஷன் பொருள் வினியோகம் கேள்விக்குள்ளாகிறது. சங்கத்தில் ஊழியர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. எனவே இரு பணிகளையும் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், ரேஷன் ஊழியர்கள் மாநிலம் முழுவதும் நேற்று முதல் புறக் கணிக்கிறோம் என்றார்.

