விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு; கூடுதல் குழிகளில் பணிகள் துவக்கம்
விஜய கரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு; கூடுதல் குழிகளில் பணிகள் துவக்கம்
UPDATED : ஜன 09, 2025 01:15 AM
ADDED : ஜன 09, 2025 01:04 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் 16 குழிகளில் பணிகள் முடிந்த நிலையில் மேலும் புதிதாக இரண்டு குழிகளில் அகழாய்வு செய்யும் பணி துவங்கியது.
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3020 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் முடிந்து குழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.
தற்போது மேலும் புதிதாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யும் பணிகள் துவங்கியது. முதல் கட்ட அகழாய்வில் 16 குழிகளில் 3254, இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகளில் 4500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையில் 16 குழிகளில் 3020 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு 6 முதல் 8 குழிகள் வரை தோண்டப்பட உள்ளது. இதனால் முதல் இரு அகழாய்வை விட மூன்றாம் கட்ட அகழாவில் கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' மூன்றாம் கட்ட அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. இரு அகழாய்வை விட இந்த அகழாய்வில் சூது பவள மணி உள்பட பல்வேறு வித்தியாசமான பொருட்கள் கிடைத்துள்ளது. இனிமேலும் புதிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.