மசினகுடி கோட்டத்தில் புலிகளை கணக்கெடுக்க 210 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்
மசினகுடி கோட்டத்தில் புலிகளை கணக்கெடுக்க 210 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்
ADDED : ஜன 25, 2025 01:05 AM

கூடலுார்:முதுமலை அருகே மசினகுடி கோட்டத்தில், புலிகள் கணக்கெடுப்புக்காக, 210 இடங்களில், தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை, களக்காடு முண்டந்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகங்களில், தானியங்கி கேமராக்கள் வாயிலாக, புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இந்நிலையில், முதுமலை அருகே மசினகுடி கோட்டத்தில், தானியங்கி கேமராக்கள் வாயிலாக, புலிகள் மற்றும் மாமிச உணவுகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
இதற்காக, சிகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு வனச்சரகங்களில் வனத்துறை சார்பில், தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கிஉள்ளது. அனைத்து கேமராக்களும் பொருத்தப்பட்ட பின், 25 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'மசினகுடி கோட்டத்தில், புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக, 210 இடங்களில் தலா இரண்டு வீதம், 420 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
'ஐந்து நாட்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் சோதனை செய்யப்படும். தொடர்ந்து, 25 நாட்கள் கேமராக்களில் பதிவாகும் புலிகள் மற்றும் மாமிச உணவுகளின் படங்களை பதிவிறக்கம் செய்து, அவைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும்' என்றனர்.

