உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் பணி நெருக்கடி; வருவாய்த்துறை அமைச்சரிடம் அலுவலர்கள் முறையீடு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் பணி நெருக்கடி; வருவாய்த்துறை அமைச்சரிடம் அலுவலர்கள் முறையீடு
ADDED : ஆக 13, 2025 01:36 AM

விருதுநகர்; உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் வருவாய்த்துறையில் பணி நெருக்கடியில் திண்டாடுவதாக அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் விருதுநகரில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதி அளித்ததாக பின் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் சில நாட்களுக்கு முன் நடந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி செப்., 3, 4ல் வேலை நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி விருதுநகரில் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.
முன்னதாக சங்க மாநில தலைவர் முருகையன் கூறியதாவது: வருவாய்த்துறையில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்காக 2021 பிப்., 19 அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த வேலை நிறுத்தத்தின் போது, பணியிடங்களை நிரப்பி அனுமதியளித்து ஆணையிடப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்கரை ஆண்டுகளாகியும் தற்போது வரை எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சர், நிர்வாக ஆணையர் ஆகியோரிடம் பல முறை முறையீட்டும் தீர்வு காணப்படவில்லை. 2023 மார்ச் 31ல் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்.
தற்போது ஜூலை 15 முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஒரு வாரத்தில் 5 முகாம்கள் நடத்தவும், விடுமுறை நாட்களில் நடத்தவும், மதியம் 3:00 மணி வரை அலுவலர்கள் உணவருந்தக் கூட அனுமதிக்காமல் அதில் பணி செய்யவும் நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். இம்முகாமில் வரும் மனுக்களில் 90 சதவீதம் வருவாய்த்துறை சார்ந்தவையே. மகளிர் உரிமை தொகை திட்ட மனுக்கள் அதிகம் வருகிறது.
பெறப்படும் விண்ணப்பங்களை அன்றிரவே இணையவழியில் பதிவேற்ற கால அவகாசம் கொடுக்காததால் பணி அழுத்தம் ஏற்படுகிறது. கருணை அடிப்படை நியனத்திற்கான உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 3, 4ல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் புறக்கணிப்பு செய்து 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
அமைச்சர் சந்திப்புக்கு பின் சங்க மாநில நிர்வாகிகள் கூறுகையில், 'செப்., வேலை நிறுத்தத்திற்கு முன்பாக தீர்வு காண்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். வாய்மொழியை விட எழுத்துப்பூர்வ உறுதியளிக்க வேண்டும். அலுவலர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும்,' என்றனர்.