உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு
ADDED : டிச 17, 2024 05:14 AM

சென்னை : உலக செஸ் போட்டியில், இளம் வயதில் 'சாம்பியன்' பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு, தமிழக அரசு சார்பில், விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சமீபத்தில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில், உலக சாம்பியனான சீன வீரர் டிங் லாரனும், இந்திய வீரர் குகேஷும் மோதினர்.
இறுதிப் போட்டி, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. ஒரு கட்டத்தில், 'டிரா'வாகும் என எதிர்பார்த்த நிலையில், தமிழக வீரர் குகேஷ், சீன வீரரை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை வென்றார்.
இதன் வாயிலாக, உலகில் மிகக் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமையை குகேஷ் பெற்றார். சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு, நேற்று காலை 10:40 மணிக்கு குகேஷ் வந்தார்.
அவரை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அவர் படித்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள், மலர் துாவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். வரவேற்புக்கு பின், 'செஸ் போர்டு' போல அலங்கரிக்கப்பட்ட காரில், அவர் அழைத்து செல்லப்பட்டார்.
எந்த துறையாக இருந்தாலும், அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும்; இல்லையென்றால் எதையும் செய்ய முடியாது. குகேஷுக்கு நாங்கள் முதலில் செஸ் தேர்வு செய்யவில்லை. செஸ் விளையாட்டை பொழுதுபோக்காகவும், எங்களின் வசதிக்காகவும் தான் தேர்வு செய்தோம். குகேஷுக்கு விருப்பம் அதிகமாக இருந்ததால், அவன் அதில் கடினமாக உழைத்தான்.உங்கள் குழந்தைகளுக்கு எதில் அதிக விருப்பம் உள்ளதோ, அதையே தேர்வு செய்து ஊக்குவிக்க வேண்டும்.
ரஜினிகாந்த் குகேஷ் தந்தை

