UPDATED : ஏப் 11, 2025 06:34 AM
ADDED : ஏப் 11, 2025 01:11 AM

சென்னை,:தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, நாட்டின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான, 'பாரதிய பாஷா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியை ஆதரித்து, இந்திய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில், கொல்கட்டாவில் உள்ள 'பாரதிய பாஷா பரிஷத்' என்ற அமைப்பு செயல்படுகிறது. இவ்வமைப்பு, இந்திய அளவில் அந்தந்த மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் சிறந்த எழுத்தாளர்களுக்கு, 'பாரதிய பாஷா' என்ற விருதை வழங்கி கவுரவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருது, தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, அவரின் வாழ்நாள் இலக்கிய பங்களிப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், பாராட்டு பத்திரமும் உடைய இவ்விருது, அடுத்த மாதம் 1ம் தேதி கொல்கட்டாவில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். பட்டப் படிப்பை முடித்து, மாணவ பத்திரிகையாளராக பயிற்சி பெற்று, இலக்கியம் படைக்க வந்தவர்.
நாவல், சிறுகதை, கட்டுரை என, 100க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார். கடந்த 2018ல், 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக, சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும், தாகூர் இலக்கிய விருது, இயல் விருது, மாக்சிம் கார்க்கி விருது, ஞானவாணி விருது, இலக்கிய சிந்தனை விருது, கலைஞர் பொற்கிழி விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய வேள் விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது நுால்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம், ஹிந்தி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், அரபு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளன. பாரதிய பாஷா விருதை, இதற்கு முன், தமிழக எழுத்தாளர்களான அசோகமித்திரன், மாலன், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பெற்றுள்ளனர்.