எழுத்து என்பது விதை நிலத்தை தானே தேர்ந்தெடுக்கும்: கவிஞர் புனிதஜோதி
எழுத்து என்பது விதை நிலத்தை தானே தேர்ந்தெடுக்கும்: கவிஞர் புனிதஜோதி
ADDED : ஜன 04, 2026 08:57 AM

சுப்புவின் கனாமகள், நிழல்களின் இதயம், மவுனக்கூத்து கவிதை தொகுப்புகள், 'வைகை கண்ட நாயகரா' பயணக்கட்டுரை, கெங்கம்மாள் நாவல், சிறுகதைகள் எழுதியவர் எழுத்தாளர், பேச்சாளர் செ.புனிதஜோதி. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பிறந்தவர். அவரது இலக்கிய, பயண அனுபவ உரையாடலிலிருந்து...,
தமிழ் இலங்கியங்களை பிற மொழிகளுக்கு கொண்டு செல்வதில் இதுவரை எத்தகைய எல்லையை எட்ட முடிந்துள்ளது?
நாம் நினைக்கும் அளவிற்கு பிறமொழிகளில் எட்டவில்லை. திருக்குறள், சங்ககால புத்தகங்கள் ஆய்வு கல்வித்தளங்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பான்மையான படைப்புகள் இன்னும் தமிழில் பூட்டிக்கிடக்கிறது. ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே அதில் விதிவிலக்கு. சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சியில் மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளது, சிறிய வாசல் திறந்தது போல் உள்ளது.
பிற மொழி இலக்கியங்களிலிருந்து தமிழ் சமூகம் இதுவரை பெற்றதும், இழந்ததும் ஒப்பீட்டு அளவில் தங்கள் கருத்து?
பிற மொழி இலக்கியங்களிலிருந்து தமிழ்ச் சமூகம் புதிய வடிவங்களைப் பெற்றுள்ளது. என்றாலும் அவற்றை அப்படியே நகலெடுக்கும் போக்கால், நமது சொந்த மண், மொழி, அனுபவத்தின் தனித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்படும்.
திருக்குறள் துவங்கி, சங்க இலக்கியம், தற்கால இலக்கியம் வரை அறக்கருத்துக்கள் போதிக்கப்படுகிறது. ஆனாலும் குற்றம், நீங்கியதாக இல்லையே?
இன்றளவும் திருக்குறள் முதல் சங்ககால இலக்கியம் வரை மதிப்பெண்ணுக்கு மட்டுமே கற்கும் போக்கு நிலவுகிறது. அந்த அறச்சிந்தனைகளை, உயிர்களை நேசித்தலை, வாழ்வின் நெறிமுறைகளை ஆழ்ந்து ஊன்றி வாழ்வியலோடு தொடர்பு கொள்ளும்படி பயிற்றுவிக்கப்படவில்லை. அதுதான் சமூக குற்றத்திற்கான காரணங்களாக நினைக்கின்றேன்.
எழுத்துலகில் தடம் பதிக்க இளைய தலைமுறைக்கான வாய்ப்புகள், தடைகள்?
இன்றைய காலத்தில் சமூக ஊடகங்கள், இணைய இதழ்கள், சுயமாய் எழுத பல இணைய ப்ளாக்குகள், வீடியோ, ஆடியோ வழியாக தடம் பதிக்கவும், நவீன தொழில்நுட்ப வசதிகளால் உடனடி புகழ், மேற்பரப்பான பாராட்டுகள் கிடைத்துவிடுகிறது. ஆனால் தொடர்ச்சியான வாசிப்பு இல்லாமை, வாசிப்பில் ஈடுபாடு இல்லாமல் பொழுதுபோக்கு அம்சத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்வதால் நவீன வசதியே பெரும் தடையாகவும் அமைந்துவிடுகிறது.
சில நாடுகளில் எழுத்தாளர்கள் பெரிய அங்கீகாரத்துடன் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ முடிகிறது. இங்கு எழுத்தையே முழு நேர தொழிலாக கொண்டு வாழும் காலம் கிட்டுமா?
மேலைநாடுகளைப்போல் எழுத்தை மட்டுமே நம்பி வாழும் சூழல் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. நமக்கிடையே வாசிப்பு பழக்கம் குறைவு. அப்படி எழுத்துக்களை நம்பி வாழ்ந்தவர்களின் கதைகளையும், அவர்களுடைய வாழ்வியல் சூழ்நிலைகளையும் நாம் பார்த்து இருக்கின்றோம்; மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு, கற்பித்தல், ஆய்வு, திரைக்கதை, டிஜிட்டல் உள்ளடக்கம் போன்ற இணை வாய்ப்புகளுடன் எழுத்து பயணித்தால், ஒரு நாள் அது சாத்தியமாகும். சமூக மதிப்பும், வாசகர் ஆதரவும் கூடவே வளர வேண்டும்.
எழுத்தும், கவிதையும் சரிந்து வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய கவிஞன், எழுத்தாளனை உருவாக்கும் வாய்ப்பை சமூகம் கொடுக்குமா?
சமூகம் எப்போதும் பெரிய கவிஞனை உருவாக்காது; ஆனால் சமூகம் தன்னை மறுத்தாலும் பெரிய கவிஞன் உருவாகிக் கொண்டே இருப்பான். ஒவ்வொரு காலத்திலும், அதற்கே உரிய வலி, வலிமை, மவுனம், சமூக அக்கறையும் கொண்ட குரல்கள் பிறக்கின்றன. வாய்ப்பை சமூகம் தராவிட்டாலும், உண்மையான கவிதை எக்காலத்திலும் கவிஞனை படைத்துவிடும். எழுத்து என்பது விதை. தனக்கான நிலத்தை தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும். சரிந்தாலும் கேடில் விழுச்செல்வமது என்றார்.
மேலும் பேச 87607 98455
