ADDED : நவ 28, 2025 11:38 PM

கால்நடை பணியாளருக்கு 'கம்பி'
திருவாரூர்: திருவாரூர் அருகே, வண்டாம்பாளை கிராம கால்நடை பணியாளர் பிரபுதாஸ், 44. இவர், 2022 ஜூன் 14ல், அதே ஊரை சேர்ந்த, 9 வயது சிறுமி ஒருவர் வீட்டிற்கு பணி நிமித்தமாக சென்றுள்ளார். அப்போது, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், நன்னிலம் மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில், பிரபுதாஸுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். சிறுமிக்கு, 6 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
கொத்தனாருக்கு '20 ஆண்டு'
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மாங்காட்டுபட்டி கொத்தனார் பழனிகுமார், 34. இவர், 2021 அக்., 21ம் தேதி கீழப்பூங்குடிக்கு கட்டட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததில், அவர் கர்ப்பமானார். சிவகங்கை மகளிர் போலீசார் போக்சோவில் பழனிகுமாரை கைது செய்தனர். பழனிக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

