ADDED : மே 20, 2025 04:29 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று(மே 19) வெவ்வேறு இடங்களில் நடந்த 5 போக்சோ குற்றங்களில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துமீறிய தொழிலாளிக்கு 'காப்பு'
விருதுநகர்: விருதுநகர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், 4 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு வெளியே இயற்கை உபாதைக்கு சென்றார். அங்கு, வாழை தோட்டத்திற்கு வேலை செய்ய வந்த தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே வெள்ளையம்மாள்புரத்தைச் சேர்ந்த பிச்சைமணி, 47, என்பவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். விருதுநகர் போலீசார், பிச்சைமணியை போக்சோவில் கைது செய்தனர்.
சிறுமிக்கு தொல்லை தந்தவர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், 32 வயது பெண்ணின் கணவர், 2013ல் இறந்து விட்டார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அப்பெண், நாச்சியார்கோவிலை சேர்ந்த பிரகாஷ், 29, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சில நாட்களாக பிரகாஷ், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். நேற்று முன்தினம், ஆடுதுறை மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து பிரகாஷை கைது செய்தனர்.
அத்துமீறிய சிறுவன் சிக்கினான்
நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 1 படிக்கிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவி வீட்டில் தனியாக இருந்த போது, மாணவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி சத்தம் போடவே அங்கிருந்து ஓடிவிட்டார். நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோவில் மாணவனை கைது செய்தனர்.
17 வயது மாணவி கர்ப்பம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த, சென்னையில் டிப்ளமோ நர்சிங் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வரும், 17 வயது மாணவியுடன் பழகினார். இருவரும் தனிமையில் இருந்ததில், மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். நெமிலி போலீசார், 17 வயது சிறுவனை போக்சோவில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
'மாஜி' ராணுவ வீரருக்கு கம்பி
வேலுார்: வேலுார், சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் புருஷோத்தமன், 71. சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, புருஷோத்தமனின் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது புருஷோத்தமன், அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். வேலுார் மகளிர் போலீசார், புருஷோத்தமனை போக்சோவில் கைது செய்தனர்.

