உங்களுடன் ஸ்டாலின் மனுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம்; போலீசில் புகார் அளித்தார் தாசில்தார்
உங்களுடன் ஸ்டாலின் மனுக்களை ஆபீசில் புகுந்து திருடிட்டாங்களாம்; போலீசில் புகார் அளித்தார் தாசில்தார்
ADDED : ஆக 31, 2025 06:53 AM

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வீசப்பட்டிருந்த விவகாரத்தில், மர்ம நபர்கள் ஆபீசில் புகுந்து திருடிச் சென்று, வைகை ஆற்றில் வீசியுள்ளதாக தாசில்தார், போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், தாசில்தார் அலுவலகத்தின் பாதுகாப்பு அவ்வளவு மோசமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகம் முழுதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில், 185 இடங்களில் முகாம் நடத்த, 40.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். ஒரு முகாமிற்கு எழுது பொருள், பேப்பர்கள் உள்ளிட்டவைகள் வாங்க, முகாமிற்கான செலவு தொகையாக, 30,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் தி.புதுார், பூவந்தி, மடப்புரம், பொட்டப்பாளையம், பழையனுார் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வைகை ஆற்று நீரில், முகாமில் மக்கள் வழங்கிய மனுக்கள் மிதந்தன.
அவை ஜெராக்ஸ் பேப்பர்கள் என, கலெக்டர் பொற்கொடி பதிலளித்திருந்தார். ஆனால், ஆக., 22, 23 ஆகிய தேதிகளில் இப்பகுதியில் நடத்தப்பட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் என்பது உறுதியானது.
இதையடுத்து, திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் போலீசில் அளித்த புகாரில், தாலுகா அலுவலகத்தில் இருந்த மனுக்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று வைகை ஆற்றில் வீசியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.
திருப்புவனம் தாசில்தார் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. அதே சமயம், அலுவலகத்தில் புகுந்து கட்டுக்கட்டாக மனுக்களை திருடிச்செல்லும் அளவிற்கு அலுவலகம் பாதுகாப்பின்றி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேண்டுமென்றே சிலர் திருடிச்சென்று ஆற்றில் வீசியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சில நாட்களில் தாசில்தாரால் தண்டிக்கப்பட்டவர்கள், அலுவலகத்தில் தகராறு செய்தவர்கள், அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் என, பல கோணங்களில் திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், இதுபோன்று எத்தனை மனுக்கள் 'காணாமல்' போயுள்ளன என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தாசில்தார் உட்பட 7 பேர் மீது
ஒழுங்கு நடவடிக்கை
இந்த சம்பவத்தை அடுத்து தாசில்தார் விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விளக்கம் கேட்டு சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சர்வே பிரிவில் உள்ள 2 வரைவாளர்களுக்கு (17 ஏ) குற்றக்குறிப்பாணை அளித்தனர். மேலும் தலைமை சர்வேயர், 3 சர்வேயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் அவர்களின் பெயர்களை வெளியிட மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. அங்கு கிடைத்த 13 மனுக்களில் 6 மனுக்கள் முகாமில் வழங்கிய மனுக்கள். மற்றவை ஏற்கனவே இணைய தளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.