ADDED : ஜன 06, 2024 12:23 AM
சென்னை:நாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்க வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டை நிர்வகிக்கும் மத்திய ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கான லோக்சபா தேர்தல் இந்திய தேர்தல் கமிஷன் வாயிலாக ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. ஆனால் மாநில அரசுகளை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களை தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ஆண்டு தேர்தல் நடக்கிறது.
இதனால் தேர்தல் செலவு அதிகரிக்கிறது. தேர்தல் செலவிற்கு வீணாகும் நிதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதற்காக நாடு முழுதும் ஒரே நேரத்தில் லோக்சபா சட்டசபை தேர்தல்களை நடத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
இதுகுறித்து பொது மக்கள் அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரின் கருத்துக்களை அறிவதற்காக உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு வாயிலாக நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு சட்ட கட்டமைப்பில் பொருத்தமான மாற்றங்களை செய்வது குறித்து பொது மக்களிடம் பரிந்துரைகள் பெறப்பட உள்ளன.
பொது மக்கள் தங்களது எழுத்துபூர்வமான ஆலோசனைகளை வரும் 15ம் தேதிக்குள் https://once.gov.in அல்லது sc-hic@gov.in என்ற இ - மெயில் வழியாக தெரிவிக்கலாம்.
மேலும் 'உயர்நிலை குழு செயலர் ஒரே நாடு ஒரே தேர்தல் ஜோத்பூர் அதிகாரிகள் விடுதி பிளாக் எண் 9 நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் அருகில் சி ஹெக்சகன் இந்தியா கேட் சர்க்கிள் புதுடில்லி 110 003' என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம்.