ADDED : மார் 15, 2024 11:40 PM

சென்னை:தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பா.ஜ., எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளிலேயே முதன்முதலில் இணையதளத்தை துவங்கியது பா.ஜ., தான்.
கடந்த, 2002 குஜராத் சட்டசபை தேர்தலிலேயே, தொலைபேசி மற்றும் மொபைல் போனில் குரல் பதிவு வாயிலாக, மோடி பிரசாரம் செய்தார். தொழில்நுட்பம் வளர வளர, 'பேஸ்புக், யு-டியூப், எக்ஸ் தளம், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களை, தேர்தல் பிரசாரத்திற்கு பா.ஜ., பயன்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவதை, ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நேரலையாக கேட்கும் வசதியை, பா.ஜ., ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. 'நமோ செயலி' இனி தமிழிலும் செயல்படும். ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக இனி என் அனைத்து உரைகளையும் தமிழில் கேட்கலாம்' என்றார்.
இதற்காக நமோ செயலியில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுதவிர பேஸ்புக், டிவிட்டர், யு-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 'நரேந்திர மோடி தமிழ்' என, தனி பக்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

