ரூ.56 லட்சம் இருந்தால் போதும் 'சார்ஜிங்' மையம் அமைக்கலாம்
ரூ.56 லட்சம் இருந்தால் போதும் 'சார்ஜிங்' மையம் அமைக்கலாம்
UPDATED : அக் 03, 2025 02:49 AM
ADDED : அக் 03, 2025 02:48 AM

சென்னை: 'தமிழகத்தில், மின் வாகனங்களுக்கான பொது சார்ஜிங் மையம் அமைக்க, 56 லட்சம் ரூபாய் மூலதன செலவாகும்' என, தமிழக பொது சார்ஜிங் உள்கட்டமைப்பு வழிகாட்டுதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சாரத்தில் ஓடும் கார், பைக், பஸ் ஆகியவற்றை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
உத்தரவு இந்த வாகனங்களுக்கு தடையின்றி, 'சார்ஜிங்' வசதி கிடைக்க, தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு, 25 கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையமும், நகரங்களில், 3 கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்க, பொதுத் துறை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, சார்ஜிங் மையம் அமைப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது.
தமிழக வழிகாட்டி நிறுவனமும், ஐ.டி.டி.பி., எனப்படும் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனமும் இணைந்து, தமிழக பொது சார்ஜிங் உள்கட்டமைப்பு வழிகாட்டுதல் அறிக்கையை தயாரித்துள்ளன.
இந்த அறிக்கையை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தற்போது, அதை வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு சார்ஜிங் மையம் அமைக்க, மின் இணைப்பு பெறுவது, கட்டுமான செலவு என, மொத்தம், 56 லட்சம் ரூபாய் மூலதனம் தேவைப்படுவதாகவும்; பின், மையத்தை பராமரிக்க பணியாளர் சம்பளம் போன்றவற்றுக்கு ஆண்டுக்கு, 9.72 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான ஒருங்கிணைப்பு பணிகளை, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் மேற்கொள்கிறது. எனவே, சார்ஜிங் மையத்தில் முதலீடு செய்ய விரும்புவோர், பசுமை எரிசக்தி கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டால், தேவைப்படும் உதவிகளை செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.