விவசாய நில அடங்கல் விபரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்
விவசாய நில அடங்கல் விபரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்
ADDED : நவ 02, 2024 12:17 AM
சென்னை:பட்டா விபரங்களை பார்ப்பது போன்று, விவசாய நிலங்களின் அடங்கல் விபரங்களை, இணையதளம் வாயிலாக பார்ப்பதற்கான வசதியை, வருவாய்த் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், நிலம் தொடர்பான அனைத்து வகை ஆவணங்களையும், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணிகள், பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன், இத்திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
மாற்ற முடிவு
இதில் முதற்கட்டமாக, நிலங்களுக்கு புதிதாக வழங்கப்படும் பட்டாக்கள் அனைத்தும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டன. புதிதாக வழங்கப்படும் பட்டாக்கள், டிஜிட்டல் வடிவில் உள்ளன.
அடுத்த படியாக, நிலங்களின், 'அ' பதிவேடு போன்ற ஆவணங்களும், நில அளவை வரைபடங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், வருவாய்த் துறை இணையதளத்தில் பட்டா, 'அ' பதிவேடு, நகர நில அளவை விபரம், நில அளவை வரைபடம் ஆகிய விபரங்களை பார்க்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, விவசாய நிலங்களின் உரிமை மற்றும் சாகுபடி விபரங்களை அறிவதற்கான அடங்கல் ஆவணங்களையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டம்
கடந்த, 2020ல் இதற்கான திட்டம் துவக்கப்பட்டது. தற்போது, இதற்கென தனியாக மொபைல் போன் செயலி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
விவசாயிகளே தங்கள் நிலத்தின் அடங்கல் விபரங்களை, இணையதளத்தில், 'அப்டேட்' செய்யும் அளவுக்கு, இதில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் புதிய முன்னேற்றமாக, 'ஆன்லைன்' முறையில் அப்டேட் செய்யப்படும் அடங்கல் விபரங்களை, பொதுமக்கள் பார்ப்பதற்கான வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
வருவாய்த்துறையின், www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில், இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், விவசாய நிலங்களை வாங்குவோர், அது தொடர்பான விபரங்களை துல்லியமாக அறிய, வருவாய்த்துறையின் அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், விவசாய நிலங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகளும், துல்லியமாக விபரங்களை பெற, இது பேருதவியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.