விடுமுறைக்காக சீனாவில் இருந்து வந்தவர்; ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி
விடுமுறைக்காக சீனாவில் இருந்து வந்தவர்; ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி
ADDED : மார் 16, 2025 03:44 PM

மதுரை: மதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அமைச்சர் மூர்த்தி, மதுரை கலெக்டர் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டியில் மொத்தம் 1000 காளைகள், 630 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி பெறப்பட்டு இருந்தது.
போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக களத்தில் இருந்த மாடுபிடி வீரர் கச்சிராயிருப்பைச் சேர்ந்த மகேஸ் பாண்டி (22) என்பவரை போட்டியில் இருந்து வெளியேறிய காளை முட்டித்தள்ளியது.
படுகாயம் அடைந்த அவர், உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த மகேஸ் பாண்டி சீனாவில் வேலைபார்த்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், காளை முட்டி உயிரிழக்க, ஊர் மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.